August 27, 2018
தண்டோரா குழு
புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கோரி தேசிய பஞ்சாலை கழக ஊழியர்கள் எட்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கஞ்சிகாய்ச்சும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஏழு பஞ்சாலைகள் தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றது.பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சம்பள ஒப்பந்தம் பேசப்பட்டு வழங்கப்பட்ட நிலையில்,ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை சம்பள ஒப்பந்தம் பேசி முடிக்கப்படாமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால் பஞ்சப்படி,வீட்டு வாடகைப்படி,பணி மூப்பு அடிப்படையில் சம்பள உயர்வு,உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.எட்டாவது நாளாக நடைபெறும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்றைக்கு தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டு,உடனடியாக சம்பள ஒப்பந்தத்தை பேசி முடிக்க வலியுறுத்தினர்.
இதனையடுத்து செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.மேலும் ஆறு முறை நிர்வாகத்துடன் தொழிற்சங்க தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.