August 23, 2018
தண்டோரா குழு
மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை என சுப்பிரமணிய சாமிக்கு மு.க.அழகிரி மகன் தயா அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது மறைவிற்கு திமுகவில் தற்போது குழப்பமான சூழல் நிலவி வருகிறது. கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகரி, எனது தந்தையுடம் எனது ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் என பேட்டியளித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், அழகிரியின் கருத்து குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசும் போது, வீட்டில் இருப்பவர்கள் பற்றி கேளுங்கள் வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம் எனக் கூறினார். இந்த கருத்துக்கு அழகிரியின் மகன் தயாநிதி அழகரி தனது டுவிட்டர் பக்கத்தில் காலம் காலமாக திமுகவிலும் அதிமுகவிலும் ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறன் என கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில்,நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான்,அழகிரியால் இட்லி கடை மட்டும் தான் வைக்க முடியும் என்றும் விமர்சித்தார்.இதையடுத்து அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை கடுமையாக விமர்சித்த தயா அழகிரி, சுப்பிரமணிய சுவாமியின் விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டார் என கடும் கண்டனம் எழுந்தது.மேலும், இதுகுறித்து தயா அழகிரி டிவிட்டர் பதிவிலும் நேரடியாக பலர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில்,அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக ‘மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை’ என தயா அழகிரி தெரிவித்துள்ளார்.