August 21, 2018
தண்டோரா குழு
சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலை சேலம்,தருமபுரி,கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சுமார் 270 கி.மீ தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்காக நிலம் கையப்படுத்தும் பணி அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால்,8 வழிச்சாலை விளைநிலங்கள் வழியாக செல்வதால் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில்,விவசாய நிலங்களில் செல்வதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.எனினும் விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி நிலம் அளவிடும் பணியை அரசு நடத்தியது.5 மாவட்டங்களிலும் நிலங்களை அளந்து கல் நடும் பணியையும் அரசு முடித்துள்ளது.
இந்நிலையில்,இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம்,பவானி சுப்புராமன் அமர்வு சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர்.
மேலும்,மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் தடை விதிக்கப்படுவதாகவும் மறு உத்தரவு வரும் வரை நிலம் கையப்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.இதையடுத்து,இது தொடர்பான விசாரணையை செப்டம்பர் 10-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.