August 21, 2018
தண்டோரா குழு
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாளை சென்னை கொண்டுவரப்பட உள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் ஆகஸ்ட் 16ம் தேதி காலமானார்.அவரது உடல் அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.இதையடுத்து,அவரது அஸ்தியை நாட்டில் உள்ள முக்கிய நதிகள் அனைத்திலும் கரைப்பது என்று பா.ஜ.க. சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில்,மறைந்த வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெல்லியில் நாளை காலை 9.30 மணியளவில் அஞ்சலி கூட்டம் நடக்கிறது.இதில் பிரதமர் மோடி,பா.ஜ.க தேசிய தலைவர்கள்,மாநில தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொள்கின்றனர்.
தமிழக பாஜக சார்பில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முக்கிய தலைவர்கள் பலர் கலந்துக் கொள்கின்றனர்.பின்னர் அஸ்தியை பெற்றுக்கொண்டு நாளை மாலை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு எடுத்து வரப்பட்டு 23ம் தேதி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அதன்பிறகு,தமிழகத்தில் சென்னையில் அடையாறு கடலில் கலக்கும் இடம்,ராமேஸ்வரம், கன்னியாகுமரி,மதுரையில் வைகை ஆறு,ஈரோட்டில் பவானி ஆறு,திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு என ஆறு இடங்களில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட இருக்கிறது.