August 21, 2018
தண்டோரா குழு
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 361 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கேரளாவில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.இதனால் வீடுகளை இழந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.இதற்கிடையில்,கேரள மழை வெள்ளத்தில் நடிகர்-நடிகைகளும் சிக்கினார்கள்.திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிருதிவிராஜ் வீட்டில் வெள்ளம் புகுந்து பிருதிவிராஜ் தாயார் மல்லிகா சுகுமாரன் வெள்ளத்தில் சிக்கினார்.
அதைப்போல் நடிகை அனன்யா,காமெடி நடிகர் சலீம்குமார் போன்றோரும் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை மீட்புபடையினர் மீட்டனர்.இதைப்போல் நடிகர் ஜெயராம் தனது மனைவி,மகளுடன் காரில் சென்றபோது நிலச்சரிவில் சிக்கி தவித்தார் அவர்களை போலீசார் மீட்டனர்.
இந்நிலையில்,நிலச்சரிவில் சிக்கித் தவித்த அனுபவம் குறித்து ஜெயராம் பகிர்ந்துள்ளார். அதில்,
“நானும் எனது மனைவி,மகளும் நிலச்சரிவில் சிக்கியது மிகவும் கொடூரமான அனுபவம்.18 மணிநேரம் அவதிப்பட்டோம்.போலீசார் வந்து எங்களை பத்திரமாக மீட்டனர்.மூன்று நாட்கள் போலீஸ் குடியிருப்பில் தான் தங்கி இருந்தோம்.இதற்காக காவல் துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இப்போது முகாம்களில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக உணவுப்பொருட்களுடன் செல்கிறேன்.குழந்தைகளுக்கு தேவையான பால் பொருட்கள்,மருந்துகள்,நாப்கின் அதிகம் தேவைப்படுகிறது.உதவி செய்பவர்கள் அவற்றை கொடுங்கள்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.