August 21, 2018
தண்டோரா குழு
மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் மறைந்ததையடுத்து கோவையில் அனைத்துக்கட்சி சார்பில் மௌன ஊர்வலம் மற்றும் நினைவஞ்சலி கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக,திமுக, இடதுசாரிகள்,மதிமுக,தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள்,தொழில்துறையினர் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் கலந்துக்கொண்டனர்.
மாவட்ட பாஜக தலைமை அலுவலகமான சித்தாப்புதூரில் துவங்கிய மௌன ஊர்வலம்,பவர்ஹவுஸ் பகுதியில் முடிவடைந்தது.ஊர்வலம் முடிவடைந்த இடத்தில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் அடல்பிகாரி வாஜ்பாய் குறித்த தங்களின் நினைவுகள் அவரின் சிறப்புகள் குறித்து பகிர்ந்துக் கொண்டனர்.பின்பு,பவுர்ஹவுஸ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவப்படத்திற்கு அனைத்துக்கட்சியினர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக,ஊர்வலம் துவங்கும் முன்,பாஜக தொண்டர்கள் மொட்டை அடித்து வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தினர்.கொள்கைகளில் வேறு பட்டிருந்தாலும்,எந்தவித பேதமுமின்றி நாட்டுக்கு உழைத்த தலைவருக்கு மரியாதையை செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்துக் கட்சியினர் நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக பார்க்கப்பட்டது.