August 20, 2018
தண்டோரா குழு
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 16,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பலியாவார்கள் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இயற்கை பேராபத்துகள் நடப்பதை முன் கூட்டியே கண்டறியும் அளவிற்கு தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிகள் வளர்ந்துவிட்டன.இதற்கிடையில் இந்தியாவில் வெள்ள பாதிப்புகளை கண்டுபிடிக்க நிறைய வசதிகள் உள்ள நிலையில் நம்மிடம் இருக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை வைத்து எளிதாக பேரிடர்களை முன்கூட்டியே கணித்து அறிவிக்க முடியும்,ஆனால் வெள்ளம் வருவதை தடுக்க முடியாது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 640 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக எச்சரித்திருந்தது.ஆனால்,இமாச்சல பிரதேசம் தவிர மற்ற எந்த மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஆய்வறிக்கை ஒன்றை தேசிய பேரிடர் ஆணையம் வெளியிட்டுள்ளது.
640 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உத்தர பிரதேசம்,உத்தர காண்ட்,பீகார்,ஜார்கண்ட், அசாம்,பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மோசமான நிலையில் உள்ளது.தமிழ்நாடு,குஜராத் ஆகியவை நல்ல நிலையில் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது.எனினும்,பெரும்பாலான மாநிலங்கள் இதை பெரிதுபடுத்தவில்லை.நீர்நிலைகள் மற்றும் அதன் வழித்தடங்களில் அமைந்துள்ள ஆக்ரமிப்புக்களை அகற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் எந்த மாநிலமும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.இதனால் 47,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும் இதை தடுக்க இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.