August 20, 2018
தண்டோரா குழு
கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை,வெள்ள சேதத்தை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. 100ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால்,கேரளாவில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தது.
கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மக்களை மீட்டு வருகின்றனர்.
இதற்கிடையில்,கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இதையடுத்து,கேரளாவில்,தொடர்ந்து,10 நாட்களாக பெய்த கன மழையால்,மாநிலத்தின் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிந்து வருகின்றது.இதனால்,மாநிலம் முழுவதும்,குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது.இதனால் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு கோரியிருந்தது.
இந்நிலையில்,கேரளா மழை வெள்ள பாதிப்பை அதி தீவிர இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும்,வெள்ளத்தில் சிக்கி 247 பேர் பலி,17,343 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.