August 18, 2018
தண்டோரா குழு
மது போதையில் வாகனம் ஒட்டிவந்ததுடன், காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரை 10 நாட்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து காவலருக்கு உதவியாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகே கடந்த ஜூலை 28 ஆம் தேதி போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் அவ்வழியே வந்த வடவள்ளி கல்வீரம்பாளையத்தை சேர்ந்த சுதர்ஷன் என்ற இளைஞர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.அப்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது காவலர்களிடம் சுதர்ஷன்தான் பெரிய ஆளு என்றும், முக்கிய பிரமுகர்களை தெரியும் என்றும், வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலர்களை மிரட்டவும் செய்தார்.
இது தொடர்பாக வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள் ரத்தினபுரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் பிடித்து விசாரித்ததில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுதர்ஷன் மது போதையில் காவலர்களை மிரட்டியதை உறுதி செய்து, சுதர்சனை கைது செய்தனர். இதனையடுத்து தான் செய்தது தவறு என்றும் காவலர்களின் பணி குறித்தும் அவர் வருத்தத்துடன் பேசிய வீடியோ, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில்,அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், விபத்து ஏற்படுத்தும் விதமாகவும், குடிபோதையில் வாகனத்தை ஒட்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த வழக்கில் கடந்த 16 ஆம் தேதி சுதர்சனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கோவை காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் பணியில் இருக்கும் போக்குவரத்து காவலருக்கு உதவியாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஈடுபடவும் நூதன முறையில் நீதிமன்றம் நிபந்தனை அளித்ததை அடுத்து, தனது பணியை சுதர்சன் இன்று துவக்கியுள்ளார்.
வழக்கமாக நிபந்தனையாக கையெழுத்து என்ற நிலையில், இதுபோன்ற நிபந்தனை வழங்கியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்திலும், வரவேற்பையும் பெற்றுள்ளது.