August 18, 2018
தண்டோரா குழு
பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்றார்.
பாகிஸ்தானில் 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆட்சி,கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது.இதனையடுத்து,அங்கு சில வாரங்களுக்கு முன்பாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ்,முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ-இன்சாப்,முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த தேர்தலில் இம்ரான்கானின் கட்சி 116 இடங்களை கைப்பற்றியது.இதனால்,சிறிய கட்சிகளின் ஆதரவுடன்,கூட்டணி அரசு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 176 வாக்குகள் பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.இதில்,பாஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுக் கொண்டார்.