August 17, 2018
தண்டோரா குழு
கோவையில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்கியதில் 3 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாயின் மறைவையொட்டி தமிழகத்தில் இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது.இதற்கிடையில்,வாஜ்பாயின் மறைவையொட்டி கோவையில் இன்று காந்திபுரம்,கிராஸ்கட் சாலை,நஞ்சப்பா சாலை, 100 அடி சாலை,டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.சில இடங்களில் திறந்துள்ள கடைகளை அடைக்குமாறு பாஜகவினர் வற்புறுத்தி வருகின்றனர்.
இதனால்,நகரில் குறைந்த அளவிலான தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.இதனிடையே கோவை பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளி சந்திப்பு,மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சந்திப்பு,ஆலந்துறை ஆகிய பகுதிகளில் சென்ற பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.இதில் பேருந்து கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.இந்த தாக்குதலில் பேருந்து டிக்கெட் பரிசோதகர் கைலாசம் என்பவருக்கு காயம் ஏற்பட்டு,சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார்,விசாரணை நடத்தி வருகின்றனர்.