August 15, 2018
தண்டோரா குழு
கோவை மொத்த மீன் விற்பனைக் கூடம் உக்கடம் லாரிபேட்டையின் பின்னால் உள்ளது.இங்கு கமிஷன் வியாபாரிகள் 48,சிறிய வியாபாரிகள் 23 பேர் கடை வைத்துள்ளனர்.இங்கு கடலூர், ராமேஸ்வரம்,காரைக்கால், நாகப்பட்டினம்,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டின,கேரள மாநிலம் திரூர், மங்களாபுரம்,கோழிக்கோடு,கொச்சின்,பட்டாம்பி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.இங்கிருந்து கோவை மீன் மார்கெட்டிற்கும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த மீன் மார்கெட்டிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், சிறு வியாபாரிகள் மீன்களை வாங்கி செல்கின்றனர்.ஆனால்,தற்போது மீன் மார்கெட் சேறும் சகதியுமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் அங்கு செல்ல முகம் சுளித்து வருகிறார்கள்.
இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத வியாபாரி ஒருவர் கூறுகையில்,
“லாரிபேட்டை அருகில் மொத்த மீன் வியாபார மார்கெட்டிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.அதைபோல் விடுமுறை நாட்களில் இன்னும் மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.இங்குள்ள மீன் வியாபாரிகளின் கடைகளுக்கு லாரிகளில் மீன்கள் கொண்டு வரப்படுகிறது.அப்போது மீன்கள் இறக்கியதும் அந்த கழிவு தண்ணீரை அங்கேயே ஊற்றுகிறார்கள்.
இதனால்,அந்த இடமே தற்போது சேறும் சகதியுமாக மாறியுள்ளது.இதனால் மீன் வாங்க வரும் மக்கள் அதன் மீதே நடந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது.அதைபோல்,மீன்கள் கொண்டு வரப்படும் தர்மாகோல்களும் அங்கேயே குப்பையாக குவித்துள்ளனர்.
மார்கெட்டிற்கு வரும் மக்கள் மீன்களை வாங்கிக்கொண்டு அதனை சுத்தம் செய்ய அந்த வழியாக தான் செல்ல வேண்டும்.ஆனால்,அந்த இடம் அசுத்தமாக இருப்பதால் மக்கள் முகம் சுழிக்கின்றனர். தற்போது,தொடர்ந்து மழை பெய்து இருப்பதால் இந்த இடம் மோசமாகியுள்ளது.இதனால் இந்த இடத்தை சுத்தம் செய்தும் கான்கிரீட் தரை அமைத்து,குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.