August 15, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தின் தலைநகர் சென்னையில்,புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தின விழாவையொட்டி தமிழக அரசின் நல்ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில்,தமிழக அரசின் சிறந்த துறைக்கான முதல்பரிசு விருது பதிவுத் துறைக்குக்கும்,இரண்டாம் பரிசு உணவுத் துறைக்கும், மூன்றாம் பரிசு சுகாதாரத் துறைக்கும் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் துணிவு,சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது,விறகு கட்டையால் சிறுத்தையை தனி ஆளாக விரட்டிய கோவையைச் சேர்ந்த ஐ.முத்துமாரிக்கு வழங்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்பில் சிறந்த மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.நகராட்சிகளில் சிறந்ததாக கோவில்பட்டி, கம்பம், சீர்காழி முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன.தமிழக அரசின் சிறந்த பேரூராட்சிகளில் சேலம் ஜலகண்டாபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது.தேனி – பழனிசெட்டிபட்டி 2வது பரிசும்,தர்மபுரி – பாலக்கோடு 3வது பரிசும் பெற்றுள்ளன.
சிறப்பு விருது காவிரி குழுவுக்கும் அதன் தலைவருக்கும்,சிறந்த டாக்டர் விருது திருப்பூரை சேர்ந்த செந்தில்குமாருக்கும்,சிறந்த சமூக பணியாளர் விருது முனைவர் லதா ராஜேந்திரனுக்கும் வழங்கப்பட்டது.
மாற்று திறனாளிகளுக்காக சிறந்த தொண்டு நிறுவனம் திருச்சியை சேர்ந்த அறிவாலயம் குழுவிற்கும்,மாற்று திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கியதற்கான விருதுடெட் எக்ஸ்போர்ட்ஸ்க்கும் வழங்கப்பட்டது.