August 15, 2018
தண்டோரா குழு
அறப்போரிலும்,ஆயுதப்போரிலும் அதிகம் பங்காற்றியது தமிழகமே என சுதந்திரதின உரையில் தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தின் தலைநகர் சென்னையில்,புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில்,காலை 9.15 மணியளவில் முதல்வர் கே.பழனிசாமி,மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.பின்னர்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த ஜீப்பில் காவல் துறையின் அணிவகுப்பினை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் சுதந்திரதின உரையில் பேசிய முதல்வர் பழனிசாமி,
“சுதந்திர தின வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.தேசியக்கொடியை 2வது முறையாக ஏற்றியதை பெருமையாக கருதுகிறேன்.சுதந்திரதின போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம் தான்.தியாகச் செம்மல்கள் வாழ்ந்த இடம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்திய சுதந்திர போராட்டத்துக்கான கேள்வி தமிழகத்தில் தான் ஆரம்பித்தது.
சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. வெள்ளையர்களுக்கு எதிராக வேலூரில் இருந்து புரட்சி தொடங்கியதை எண்ணி பெருமை கொள்வோம்.அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.உயர்கல்வி சேர்க்கை 48 சதவீதம் அதிகரித்துள்ளது.ஜெயலலிதா வழியில் அரசு ஏழைகளுக்காக பாடுபட்டு வருகிறது.காவிரி நதி நீரை போராடி பெற்று தந்தது ஜெயலலிதா அரசு. சட்டப்போராட்டத்தின் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மையை பின்பற்றும் உன்னத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது”.இவ்வாறு பேசினார்.