August 10, 2018
தண்டோரா குழு
கேரளாவில் கனமழை,வெள்ளம்,நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.
கேரளா மற்றும் கா்நாடகா மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது.கடந்த சில தினங்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
கேரளாவின் இடுக்கி,கோழிக்கோடு,வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கொல்லம் ஆகிய பகுதிகளில்கனமழை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு இடங்களில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.மேலும்,உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கேரளாவில் பெய்யும் கனமழை பாதிப்பில் இருந்து மக்களை காக்க ராணுவம் மற்றும் கப்பற்படை உதவியை கேரள அரசு நாடியுள்ளது.3 தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும், கடலோர காவல்படை குழுவினரும் ஏற்கனவே கேரளா வந்தடைந்தனர்.மேலும்,6 கூடுதல் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்ப மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது.