August 8, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார்.
இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தற்போது, திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கலைஞரின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. ராஜாஜி அரங்கத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் மல்க பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கத்தை அடைந்ததும், குடும்பத்தினர் மற்றும் தலைவர்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு, கலைஞரின் உடல் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்கம் செய்யப்படும்.