August 7, 2018 
                                திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
“தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும்,இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும்,50 ஆண்டுகளாக திமுக தலைவரும்,தற்போது சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ள கருணாநிதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (7.8.2018) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
பள்ளிப் பருவத்தில் நாடகம்,கவிதை,இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்ட அன்னார், தனது 14-வது வயதிலேயே சமூக இயக்கங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். கருணாநிதி 1957-ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் முதன் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு,தமிழ்நாடு சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தார்.அதிலிருந்து அவர் போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் வெற்றி பெற்ற சிறப்புக்குரியவர்; சமூக நீதிக்காக போராடியவர். 
கருணாநிதி 1969-ம் ஆண்டு முதன் முறையாக தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.அரசியல் மட்டுமின்றி,தமிழ் இலக்கியம்,தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை,வசனம் போன்ற துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி,சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.தமிழ்நாட்டு அரசியல் மட்டுமின்றி,இந்திய அரசியலிலும் தனது முத்திரையைப் பதித்தவர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பாகும்.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும்,அன்னாரது மகனும்,தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கும்,திராவிட முன்னேற்றக் கழக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.