August 7, 2018
தண்டோரா குழு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையில்,காவிரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும்,24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே கூற முடியும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இச்செய்தியை அறிந்த திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கி வா வா தலைவா எழுந்து வா தலைவா என கோஷமிட்டு வருகின்றனர்.கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க நிர்வாகிகள் காவேரி மருத்துவமனையில் கூடியுள்ளனர்.
இதற்கிடையில்,காவிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார்.
முதல்வரின் இல்லத்தில் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அழகிரி, கனிமொழி,முரசொலி செல்வம்,ஐ.பெரியசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.திமுக தலைவர் கருணாநிதி கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.