August 7, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், காவிரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே கூற முடியும் என தெரிவித்திருந்தது.
இந்த செய்தியை அறிந்த திமுக தொண்டர்கள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். இதையடுத்து,காவிரி மருத்துவமனை முன்பு வா வா தலைவா எழுந்து வா தலைவா என கோஷமிட்டு வருகின்றனர். கலைஞர் உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க நிர்வாகிகள் காவேரி மருத்துவமனையில் கூடியுள்ளனர். தொடர்ந்து தொண்டர்களில் வருகை அதிகரித்து வருவதால் மருத்துவமனை முன்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து,தலைமைக் கழக நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.