August 6, 2018
தண்டோரா குழு
கோவை கரும்புக்கடை பகுதியில் இணைப்பு சாலை அமைப்பதால் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக, அத்திட்டத்தை கைவிட கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரும்புக்கடை முதல் நஞ்சுண்டாபுரம் பகுதி வரை 6 கிலோ மீட்டர் தூரம் இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைப்பதால் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுமெனவும், அத்திட்டத்தை கைவிட கோரியும் சாரமேடு பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், அங்கு வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கிய நிலையில் ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற முயற்சிப்பதாகவும், 300 வீடுகள் பாதிக்கப்படுமெனவும் எனவும் கூறிய அப்பகுதி மக்கள், ஏற்கனவே உள்ள சாலைகளை மேம்படுத்தினாலே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியுமென தெரிவித்தனர். இல்லையெனில் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை தலைமை செயலகத்தில் ஒப்படைப்போம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.