August 6, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் பொதுமக்கள் விருப்பப்படி அரசு மதுப்பானக்கடை திறக்க வேண்டுமென, அனைத்து கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியை சேர்ந்த அனைத்து கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதிமுக, திமுக, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில், அப்பகுதியில் ஒரு அரசு மதுபானக்கடை திறக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கள்ள மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அரசு மதுபானக்கடை திறக்க வேண்டுமென பொதுமக்கள் பலரும் விருப்பப்படுவதாகவும், இதனால் அதிக விலை கொடுத்து மது வாங்குவதாகவும், பல கிலோ மீட்டர் மதுக்கடை தேடி செல்வதும் தவிர்க்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மதுபானக்கடைக்கு எதிராக கருமத்தம்பட்டி பகுதி மக்கள் போராடி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் மதுக்கடை திறக்க கோரி மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.