August 4, 2018
தண்டோரா குழு
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நிலை பற்றி மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூலை 27ம் தேதி ஏற்பட்ட திடீர் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கருணாநிதி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதும்,அவரது உடல் நலம் குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு,காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திரைத்துறை சம்பந்தப்பட்டவர்களும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில்,காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நிலை பற்றி மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு,பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு,மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி.தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மூத்த அரசியல்வாதியான கருணாநிதி விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் என்றுக் கூறினார்.