August 2, 2018
பி.எம்.முஹம்மது ஆஷிக்
கார்கள் வைத்திருந்தாலே நல்ல மரியாதை கிடைக்கும் இந்த காலகட்டத்தில் சொகுசு கார்களை வைத்திருப்பதால் அவர்கள் தனித்து பார்க்கப்படுகின்றனர். போக்குவரத்து வசதிக்காக கார் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர குடும்பத்தினர் கூட கார் வாங்க ஆசைப்படுகின்றனர். இதற்கேற்ப நிறுவனங்களும் புதிய மாடல்களை களம் இறக்கி வருகின்றன.
கோடிக்கணக்கான ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ், லம்போகினி, ஜாகுவார், புகாட்டி,ஹென்னெஸ்சே, வால்வோ, வோல்க்ஸ் வேகன், பி.எம்.டபிள்யூ, பென்ஸ், ஆடி, போன்ற கார்கள் இந்திய சந்தைக்குள் வந்துவிட்டன. சாலையில் மின்னல் வேகத்தில் செல்லும் இந்த கார்களை பார்க்கும் போது நமக்கே சற்று கண்ணை கவரும் வகையில் தான் இருக்கும். இக்கார்களை ஓட்டும் வாகன ஒட்டுனருக்கு கொஞ்சம் தன் கட்டுப்பாட்டை இழந்தால் விபரீதம் அவருக்கு மட்டுமல்ல சாலையில் செல்லும் அப்பாவி மக்களுக்கும் தான். அப்படி ஒரு அசம்பாவிதம் தான் கோவையில் நேற்று நடந்துள்ளது.
கோவை சுந்திராபுரம் பகுதியில் நேற்று காலை வழக்கம்போல பேருந்திற்காக பொதுமக்களும், மாணவர்களும் காத்திருந்தனர். அருகிலேயே ஆட்டோ நிறுத்தமும் உள்ளது. அப்போது அவ்வழியாக மின்னல் வேகத்தில் பொள்ளாச்சியிலிருந்து கோவையை நோக்கி ஒரு சொகுசு கார் வந்து கொண்டிருந்தது. திடீரேனே யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அந்த கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மற்றும் ஆட்டோ மின்கம்பம் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விசாரணையில் சொகுசு காரை ஓட்டிவந்தவர் ஜெகதீசன் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. அதில், பேருந்துக்காக நின்றிருந்தவர்கள் மீது மின்னல் வேகத்தில் சொகுசு கார் மோதும் காட்சிகள் நெஞ்சை பதை பதைக்க வைக்கின்றன.
காலை நேரம் போக்குவரத்து நேரில் நிறைந்த அப்பகுதியில் ஏன் இந்த வேகம் என்ற கேள்வி எழுகிறது.
சமீபகாலமாக ஆட்டோமேட்டிக்கார்கள் விற்பனை அதிகரித்து வருகிறது என்பதை புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சொகுசு கார்களை வாங்கும் செல்வந்தர்கள் பெரும்பாலும் அதை அவர்கள் ஓட்டுவது கிடையாது. மாறாக டிரைவர்கள் தான் அந்த காரை ஓட்டுகிறார்கள். இதில், முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய விஷயம் அந்த டிரைவர்களுக்கு இந்த சொகுசு கார்களை ஓட்ட தெரியுமா என்பது தான். சாதாரணமாக கார் ஓட்டுபவர்கள் இந்த சொகுசு கார்களை ஓட்டுவது கொஞ்சம் கடினம். அதற்கென தனியாக பயிற்சி பெற்றால் தான் அந்த கார்களை ஓட்ட முடியும். தற்போது யாரும் அப்படி கவனிப்பது இல்லை. அதனால் சில சமயங்களில் சொகுசு கார்களை டிரைவர்கள் தங்கள் கட்டுபாட்டை இழந்து விபத்து நேர்ந்து விடுகிறது.
இதுகுறித்து சொகுசு கார் டீலர் ஒருவர் கூறுகையில்,
பொதுவாக சொகுசு கார்களை நாங்கள் விற்பனை செய்யும் போதே வாடிக்கையாளருக்கு முறையாக அந்த கார் குறித்த எல்லா புதிய வசதிகளையும் கூறிவிடுவோம். அதற்கான பயிற்சிகளை நாங்கள் அளிக்கின்றோம். வாடிக்கையாளர்கள் காரை வாங்கி சென்ற பின் அவர்கள் முறையாக இந்த சொகுசு காரை ஓட்ட தெரிந்த அனுபவமுள்ள டிரைவர்களை நியமிக்க வேண்டும். சாதாரண கார் ஓட்டுவதில் முன் அனுபவம் உள்ளவாரா என்பதை மட்டும் பார்த்தா போதாது. சொகுசு காரை ஓட்ட ஏதேனும் பிரத்தேக பயிற்சி பெற்றுள்ளாரா? என்பதையும் பார்க்க வேண்டும். எனினும் அரசும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதைபோல் வாகனத்தில் செல்பவர்களுக்கும், சாலையில் செல்பவர்களுக்கும், வாகனத்திற்கு எதுவும் ஆகா கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் சாலைவிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சாலை விதிகளை நாம் சரியாக பின் பற்றினாலே போதும். இது போன்ற சாலை விபத்துகளை தவிர்த்துக்கொள்ளலலாம். சொகுசு கார்களுக்கு வேகம் அதிகம் என்பது உண்மை தான். ஆனால், அதை இடத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சாதாராண கார்களை ஓட்டும் டிரைவர்களை சொகுசு கார்களை ஓட்ட அனுமதி சரியில்லை. சொகுசு கார் ஓட்டுவதற்காகவே பிரத்தேகமாக ஓரிரு நாட்கள் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். அதன்பின் இதற்காகவே ஒரு சான்றிதலும் அளிக்க வேண்டும். அப்படி செய்தால் சொகுசு கார் ஓட்ட தெரிந்த முறையான டிரைவர்கள் கிடைப்பார்கள். இதனை நடைமுறைப் படுத்த அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் இதன் மூலம் விபத்துகளை தவிர்க்கலாம் என்றார்.
யானைக்கும் அடிசறுக்கும் என்பதை போல இதுபோன்ற அதிகம் சீறி பாயும் கார்களின் வேகத்தை அதை ஓட்டுநரே இடத்திற்கு தகுந்தார்போல் குறைத்து கொள்ள வேண்டும். அரசும் சொகுசு கார்களின் விபத்துகளை தவிர்க்க ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.