August 2, 2018
தண்டோரா குழு
வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் என விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.
கடந்த வாரம் திருப்பூரில் கார்த்திக் – கிருத்திகா தம்பதியினர், கார்த்திக்கின் நண்பர் பிரவீன் மூலம் கருவுற்றிருந்த கிருத்திகாவிற்கு சமூக வலைத்தளங்களில் கூறப்பட்ட மரூட்டி என்கிற முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். இதில்,அதிக இரத்தப்போக்கால் தாய் கிருத்திகாவின் உடல்நிலை மோசமாகி அவர் உயிரிழந்தார்.
இதற்கடையில், மரூட்டி முறையில் வீட்டில் இருந்தபடியே மருந்து மாத்திரை, தடுப்பூசி எதுவும் இன்றி சுகப்பிரசவமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் வருகிற 26ஆம் தேதி நடைபெறும் என கோவைபுதூரில் செயல்பட்டு வரும் நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரம் குறித்து, இந்திய மெடிக்கல் கவுன்சில் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விளம்பரத்தை வெளியிட்டது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் அந்நிறுவனத்திடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, நிஷ்டை மையத்தின் உரிமையாளர் ஹீலர் பாஸ்கரிடம் மாநகர சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விசாரணைக்கு ஹீலர் பாஸ்கர் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஹீலர் பாஸ்கர் மற்றும் நிஷ்டை அமைப்பின் மேலாளர் சீனிவாசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே ஹீலர் பாஸ்கரை, குனியமுத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது மோசடி மற்றும் ஏமாற்ற முயற்சி என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.