August 1, 2018
தண்டோரா குழு
கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த விடுதி காப்பாளர் புனிதாவை மாதர் சங்கத்தினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பீளமேடு பகுதியில் தர்ஷனா என்ற பெண்கள் விடுதி நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் அந்த விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவிகளை விடுதியின் உரிமையாளர் ஜெகநாதனுடன் உல்லாசமாக இருப்பதற்கு வார்டன் புனிதா அழைப்பு விடுத்துள்ளார்.இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகள் விடுதியை விட்டு வெளியேறினர்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விடுதி காப்பாளர் புனிதா மற்றும் உரிமையாளர் ஜெகநாதன் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து விடுதி உரிமையாளர் ஜெகநாதன் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
புனிதாவை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்த நிலையில்,விடுதி வார்டன் புனிதா இன்று கோவை 6 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.சரணடைந்த புனிதாவை நீதிபதி கண்ணன் வரும் 14 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனைதொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே புனிதாவை காவல் துறையினர் அழைத்து வந்த போது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு கண்டன கோசங்களை எழுப்பினர். மேலும்,புனிதாவை அவர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மாதர் சங்கத்தை தடுத்து நிறுத்திய போலீசார் புனிதாவை அவசர அவசரமாக வாகனத்தில் ஏற்றி கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.
பெண்களின் சமூகத்திற்கே அவமானமாக உள்ள புனிதா மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இவ்வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதால் விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.