July 31, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி நன்றாக இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.இதற்கிடையில்,கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து,மாநில மற்றும் தேசிய அளவில் இருந்து அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு முக்கிய பிரபலங்களும் காவிரி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.இதையடுத்து,கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வரவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில்,திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வந்தடைந்தார்.பின்னர்,சென்னை விமான நிலையத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு வந்த ராகுல் காந்தி கருணாநிதியின் உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.அவருடன் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,
“திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்தேன்.அவர் நன்றாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.அவரது உடல்நிலை சீராக உள்ளது.கருணாநிதி இயல்பிலேயே போராட்ட குணமிக்கவர். விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று சோனியாகாந்தி தனது விருப்பத்தை தெரிவித்து உள்ளார்.கருணாநிதி தமிழ் மக்களின் உத்வேகமாக இருந்து வருகிறவர்.கருணாநிதி காங்கிரசுடன் நீண்டகாலமாக நட்புறவு கொண்டுள்ளவர்.கருணாநிதி தமிழ் மக்களைப்போல் உறுதி மிக்கவர்”. எனக் கூறினார்.