July 31, 2018
தண்டோரா குழு
முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருணாநிதி,அவரது மனைவிகள், ஸ்டாலின்,கனிமொழி,மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்கள் சொத்து மதிப்பு என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்கானிப்பில் இருந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த ஜூலை 27ம் தேதி இரவு கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து,மாநில மற்றும் தேசிய அளவில் இருந்து அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு முக்கிய பிரபலங்களும் காவிரி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இதற்கிடையில்,கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும்,மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பலரும் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற்று எழுந்து வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜுதனது பேஸ்புக் பக்கத்தில்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதில்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி மீது தமிழர்கள் மிகுந்த பரிதாபப்படுகிறார்கள்.ஆனால் கருணாநிதி அரசியலுக்கு வரும் முன் அவரது சொத்து மதிப்பு என்ன? இப்போது கருணாநிதி,அவரது மனைவிகள்,ஸ்டாலின்,கனிமொழி,மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்கள் சொத்து மதிப்பு என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்,காமராஜர் உயிரிழந்த போது அவரிடம் எதுவுமே இல்லை.ஆனால் தற்போது இது தலைகீழாக உள்ளது என கருணாநிதி மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.