July 27, 2018
தண்டோரா குழு
தொடர் சிகிச்சையால் கருணாநிதி உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட காவிரி மருத்துவமனை நிர்வாகம்,சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார்.நோய் தொற்று காரணமாக யாரும் அவரை நேரில் சந்திக்க வேண்டாம் என கூறியிருந்தது.
இதற்கிடையில்,நேற்று முதல் தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் திமுக தொண்டர்களும்,கோபாலபுர இல்லத்தில் குவிந்த வண்ணமாக உள்ளனர்.எனினும் கருணாநிதி உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கலைஞரின் உடல்நிலை பற்றி விஷமிகள் பரப்பும் வதந்திகள் எதையும் கழகத்தொண்டர்களும், கட்சி சார்பற்ற முறையில் தலைவரின் உடல்நிலையை பற்றி அக்கறையுடன் விசாரித்து வரும் அனைத்து தரப்பு மக்களும் நம்ப வேண்டாம் என்று திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
கலைஞருக்கு அளிக்கபட்டு வரும் தொடர் சிகிச்சையின் விளைவாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.24 மணி நேரமும் மருத்துவர்கள் நன்கு கவனித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.மருத்துவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கழகத் தோழர்கள்,நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கலைஞரை சந்திக்க வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவி மடுக்கவும் வேண்டாம்.அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம் என்று தலைமை கழகத்தின் சார்பில் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்”.இவ்வாறு கூறியுள்ளார்.