July 27, 2018
தண்டோரா குழு
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குள் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீபிரியா என்ற பெண்ணை திடீரென காவல்துறையினர் கோவிலுக்குள் நுழைந்து கைது செய்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் மகேஷ் ஸ்ரீனிவாசன்(45).இவரது மனைவி ஸ்ரீபிரியா (42).மகேஷ் ஸ்ரீனிவாசன் மனைவியின் பெயரில் உள்ள நிறுவனத்தின் மூலம் பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு குடும்பத்தை விட்டுவிட்டு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.
கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத காரணத்தால் இவரது குடும்பத்திற்கு அடிக்கடி மிரட்டல்களும் காவல் துறையினரால் கைது நடவடிக்கைகளும் நடப்பதாக கூறப்படுகிறது.கடந்த ஜூன் மாதம் முத்து கிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஸ்ரீபிரியாவை கைது செய்தனர்.
பின்னர் விசாரணை செய்து விட்டு விட்டதாகவும்,மீண்டும் போலீசார் கைது நடவடிக்கைக்கு தயாராவதை அறிந்து ஸ்ரீபிரியா,சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கியுள்ளார். வழக்கில் விசாரணை இறுதியில் ஸ்ரீபிரியாவுக்கு எதிரான வழக்கை போலீசார் முடித்துக் கொண்டதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில்,பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற ஸ்ரீப்ரியாவையும்,அவரது ஓட்டுநர் குமாரரையும் காவல்துறையினர் கோவிலுக்குள் நுழைந்து கைது செய்துள்ளனர்.கோவிலுக்குள் இருந்த பெண்ணை திடீரென போலீசார் கைது செய்ததால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையில்,நீதிமன்ற உத்தரவை மீறி சிறை வைத்துள்ள தனது தாயாரை விடுவிக்கக்கோரியும், இதனால் மனவளர்ச்சிக் குன்றிய சகோதரனும் தானும் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக கூறி ஸ்ரீபிரியாவின் இரண்டாவது மகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.ஸ்ரீபிரியா கைது செய்யப்படவில்லை என்றும்,விசாரணைக்கு மட்டுமே அழைத்து வரப்பட்டதாகவும்,பின்பு விடுவிக்கப்பட்டதாக ஸ்ரீபிரியாவை கோவிலிலிருந்து அழைத்து சென்ற மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.