July 27, 2018
தண்டோரா குழு
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பிற மாவட்டங்களில் காய்கறி விலை உயர்ந்துள்ள நிலையில், கோவையில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளதால் காய்கறிகளின் விலை குறைந்து உள்ளது.
கோவை மாவட்ட சுற்றுப்புற கிராமங்களில்,காய்கறிப் பயிர்கள் நன்கு விளைச்சலை கொடுத்து வருகின்றன.உருளைக்கிழங்கு,பெரிய வெங்காயத்திற்கு மற்ற மாநிலங்களை நம்பியே கோவை இருக்கிறது.
கோவையில் விளையும் காய்கறிகள்,கேரளாவுக்கு அன்றாடம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.லாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை.
மேலும்,கோவை சுற்றுப்புற கிராமங்களில் விளையும் காய்கறிகள்,சிறிய ஆட்டோ,டெம்போக்களில் மார்க்கெட்டுக்கு எளிதாக வந்து சேர்க்கிறது.இதனால் கோவையில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட், அண்ணா மார்கெட்,ராஜவீதி டி.கே மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஏராளமான காய்கறிகள் டிப்பர் லாரிகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இருப்பில் உள்ள காய்கறிகளை வந்த விலைக்கு விற்பனை செய்யும் முடிவுக்கு காய்கறி வியாபாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.இதனால் காய்கறி விலை கடந்த வாரத்தை விட வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் 30 ரூபாய்க்கு,விற்கப்பட்ட ஆப்பிள் தக்காளி தற்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.30 ரூபாயாக இருந்த அவரைக்காய் 15 ரூபாய்க்கும்,20 ரூபாயாக இருந்த சுரக்காய், 10க்கும் விற்கப்படுகிறது.இதேபோல பல காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது. மேலும் காய்கறிகளை வாங்க ஆளில்லாமல் அழுகு வீணாகும் நிலை உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.