July 27, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாகவே,உடல்நலம் பாதிக்கப்பட்டு காணப்படுகிறார். இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,வயது மூப்பு காரணமாக உடல் நலிவுற்று காணப்படுகிறது.யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரம் சென்று, கருணாநிதி நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“திமுக தலைவரும்,எனது ஆருயிர் நண்பருமான கருணாநிதியின் உடல்நிலை,வயது முதுமை காரணமாக சற்று நலிவடைந்திருப்பதாகவும்,சிறுநீரகக் குழாயில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக கருணாநிதிக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.
தமிழக அரசியலில் முறியடிக்க முடியாத பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் கருணாநிதி ஆவார்.திமுகவின் தலைவராக கருணாநிதி பதவியேற்றதன் 50 ஆவது ஆண்டு வியாழக்கிழமை தொடங்கிய நிலையில்,அவரது உடல்நிலை பாதிப்பு குறித்த தகவலும் வந்திருப்பது நம்மை பாதித்திருக்கிறது.கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு அவரை காவேரி மருத்துவமனையிலும்,கோபாலபுரம் இல்லத்திலும் நேரில் சென்று சந்தித்தேன்.
கோபாலபுரம் இல்லத்தில் என்னை கருணாநிதி மிகச்சரியாக அடையாளம் கண்டு கொண்டார். அதனால் அவர் மிக விரைவில் உடல் நலம் தேறி மீண்டும் மக்கள் பணியாற்ற வருவார் என நானும் மற்றவர்களும் எதிர்பார்த்திருந்தோம்.ஆனால்,அதற்கு மாறாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,காய்ச்சலில் அவதிப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது.
கருணாநிதிக்கு அவரது இல்லத்திலேயே தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில்,அவர் முழுமையான உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறேன்.அவர் நூற்றாண்டு விழா காண வேண்டும்; மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.