July 26, 2018
தண்டோரா குழு
கேரள போலீசார்,கடன் வழக்கு தொடர்பாக சென்னையில் இருந்து கேரளாவிற்கு நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்து அழைத்து செல்லும் போது,கோவை அருகே 30 பேர் கொண்ட கும்பல் கேரளா காவல் துறையினரை தாக்கி நிதி நிறுவன உரிமையாளரை கடத்தி சென்றனர்.இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மகாராஜன்(43).இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.இவரிடம் கேரள மாநிலம் பள்ளந்தட்டி பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரிடம் 45 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
ஜேக்கப் கடன் வாங்கியிருந்த போது தன்னுடைய வோல்வா காரை மகாராஜனிடம் தந்துள்ளார். அதைத் தொடர்ந்து மகாராஜனிடம்,வாங்கிய பணத்தை ஜேக்கப் திருப்பி கொடுத்த பிறகும் மகாராஜன் காரை தராமல் ஏமாற்றி வந்துள்ளதாகவும் ஜேக்கப் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீசார் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் அடங்கிய குழு கடந்த 22ம் தேதி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வைத்து மகாராஜனை மாலை 5 மணிக்கு கைது செய்து கேரளாவிற்கு ஒரு இன்னோவா காரில் அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கேரள போலீசார் வந்த கார் நள்ளிரவு சூலூர் பகுதியில் உள்ள கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் சுங்க சாவடி அருகே வந்த போது அங்கு தயாராக இருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட நபர்கள் அடங்கிய கும்பல் கேரள போலீசாரை தாக்கிவிட்டு அந்த காரிலிருந்த மகாராஜனை மீட்டுச் சென்றனர்.
இந்நிலையில் அவரை மீட்டு சென்ற கும்பலில் இருந்து மூன்று பேரை கருமத்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.இவர்கள் மூன்று பெரும் தூத்துக்குடியை அடுத்த சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.மகாராஜனின் உறவினர் அழைத்ததன் பேரில் இவர்கள் கோவைக்கு வந்துள்ளனர்.மேலும் இவருடன் இருந்தவர்களையும்,மகாராஜனையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.