July 25, 2018
தண்டோரா குழு
குஜராத்தில் பட்டேல் சமுதாயத் தலைவர் ஹர்திக் படேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் படேல் இனத்தவருக்கு கல்வி,வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் இடஒதுக்கீடு கோரி கடந்த 2015-ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.பதிதார் அனாமத் அந்தோலன் சமிதி என்ற அமைப்பின் தலைவர் ஹர்திக் படேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் படேல் இனத்தினர் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
மேசனா மாவட்டம் விஸ்நகரில் ஜூலை 23,2015ம் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.அப்போது ஏற்பட்ட வன்முறையில் பல சொத்துக்கள் சேதபடுத்தப்பட்டன.அப்போது,பிஜேபி எம்.எல்.ஏ. ரிஷிகேஷ் படேலின் அலுவலகத்தை அடித்து நொறுக்கப்பட்டது.
இதையடுத்து,பதிதார் அனாமத் அந்தோலன் சமிதி என்ற அமைப்பின் தலைவர் ஹர்திக் படேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது.இந்நிலையில்,இந்த வழக்கில் விஸ்நகர் நகரம் அமர்வு நீதிமன்ற நீதிபதி அகர்வால் இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதில்,ஹர்திக் படேல் மற்றும் அவருடைய இரண்டு உதவியாளர்கள்,லால்ஜி படேல் மற்றும் ஏ.கே. படேல் ஆகியோருக்கு தலா 2 வருட சிறைத்தண்டனையும்,மேலும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.