July 25, 2018
தண்டோரா குழு
பெங்களூரிலிருந்து கேரளாவிற்கு விரோதமாக கடத்த முயன்ற புகையிலை பொருட்களை தமிழக-கேரள எல்லையான கோவை வாளையாறு சோதனை சாவடியில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை வாளையாறு கந்தேகவுண்டன் சோதனை சாவடியில் காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போது,கேரளா நோக்கி செல்ல இருந்த காரில் மூட்டைகள் இருந்ததை கண்டு சந்தேகமடைந்தனர்.
இதனையடுத்து விசாரித்ததில்,மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.உடனே,கோவை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சோதனை சாவடி காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள்,காரில் வைக்கப்பட்டிருந்த 10 மூட்டைகளில் இருந்த சுமார் 70ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சுமார் 150 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும்,புகையிலை பொருட்களை கொண்டு சென்ற கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த விபின்,ரியாஸ் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் தொடர்ச்சியாக இருவரும் பெங்களூரிலிருந்து கோவை வழியாக கேரளாவிற்கு குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு சென்றது தெரிய வந்ததால் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக,கே.ஜி.சாவடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.