July 25, 2018
தண்டோரா குழு
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்திக்க நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.அவருடன் அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றிருந்தனர்.டெல்லி விமானநிலையத்தில் அவர்களை மைத்ரேயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம்,
“டெல்லிக்கு வந்தது அரசியல் பயணமோ அல்லது அரசு சார்ந்த பயணமோ இல்லை.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது மரியாதை நிமித்தமானது.எனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்கு,மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.லோக்சபா தேர்தலுக்கான சூழல் உருவாகவில்லை.அறிவிப்பு வந்தவுடன் நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள்” எனக் கூறினார்.
இதற்கிடையில், டெல்லியில் அதிமுக எம்.பி. மைத்ரேயனை சந்திக்கவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரம் ஒதுக்கி உள்ளார்.துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் தகவல் வெளியிட்டது.இதனால்,அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில்,டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம்,நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்ததாக வெளியான தகவல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இக்கேள்விக்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம்,“எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என தெரிவித்தார்.