July 24, 2018
தண்டோரா குழு
சபரிமலையில் பெண்கள் நுழைய தடை உள்ளது போன்றது தான், மசூதிகளில் பெண்களுக்கு உள்ள தடை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலை கோவிலுக்குள், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’ எனக் கோரி, இந்திய இளைஞர் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மகளிர் அமைப்பினர், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நடந்தது.அப்போது சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என தேவசம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,தேவசம்போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடுகையில், இந்தியாவில் ஏராளமான அய்யப்பன் கோயில்கள் உள்ளன. அங்கு பெண்கள் செல்ல அனுமதி உள்ளது என்றார். மேலும்,இந்தியாவில், மசூதிகளுக்குள் நுழைய பெண்கள் அனுமதிக்கப்படுவது கிடையாது எனவும் கூறினார்.
அப்போது,அரசியல் சாசனம் ஒரு திசைகாட்டி என்றும் இது அனைத்து நம்பிக்கைகளுக்கும் பொருந்தும் எனவும் நீதிபதி நாரிமன் கூறினார். மேலும், சபரிமலையைப் போல, பெண்கள் மசூதிக்குள் நுழையும் விவகாரமும் இதே வகையில் தான் வரும் என்பதை ஒத்து கொள்வதாகவும் அவர் கூறினார்.