July 23, 2018
தண்டோரா குழு
தமிழக முதல்வரால் கடந்த மார்ச் 24ஆம் தேதி துவக்கப்பெற்ற காசநோயை கண்டறியும் MOBILE CBNAAT என்ற நடமாடும் வாகனம் இன்று முதல் ஜூலை 28 வரை கோவை மாவட்டத்திற்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்தியாவில் காசநோயை வரும் 2025ம் வருடத்திற்குள் முற்றிலும் ஒழிக்கும் முயற்சி ஈடுபட்டு வருகிறது.தமிழக அரசின் காசநோய் கண்டறியும் நடமாடும் வாகனம் மூலம் பரிசோதனை முகாம்கள் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது.கோவை மாவட்டத்தில் அதிகபடியான காசநோயாளிகள் சிகிச்சை பெரும் காசநோய் வட்டங்களுக்கும் நகர,கிராம பகுதிகளுக்கும் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கும் இந்த வாகனம் நேரடியாக சென்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் வீரியமுள்ள காசநோயை முறையான பரிசோதனை மூலம் கண்டறிய செயல்படவுள்ளது.
காசநோயின் முக்கிய அறிகுறிகளான 2 வாரத்திற்கு மேல் இருமல்,பசியின்மை,மாலை நேர காய்ச்சல்,சளியில் ரத்தம் வருதல் மற்றும் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் இந்த பரிசோதனையை முற்றிலும் இலவசமாக செய்து கொள்ளலாம்.
கோவை மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு 3ஆயிரத்து 146 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.இதில்,87 சதவிகித காசநோயாளிகள் குணமடைந்துள்ளனர்.இந்தாண்டு ஜூன் வரை ஆயிரத்து 576 காசநோயாளிகள் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கோவை மாவட்டத்திற்கு வந்த இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.