July 20, 2018
தாய் போல் செயல்பட வேண்டிய மத்திய அரசு,மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை நடத்துகிறது என அதிமுக எம்.பி வேணுகோபால் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் காலை 11:00 மணி முதல் நடைபெற்று வருகிறது.பல்வேறு கட்சி எம்.பி.க்களும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக மத்திய அரசை விமர்சித்து பேசினார்.
இந்நிலையில்,பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அதிமுக எம்பி வேணுகோபால் பேசும் போது,
“மத்திய,மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு என்பது தாய் – குழந்தை உறவை போன்றது. குழந்தையின் தேவை என்ன என்பதை அறிந்து தகுந்த நேரத்தில் கொடுப்பவள் தாய்.ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களை மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்ததற்கு நன்றி.காவிரியில் கர்நாடகா முறையாக நீரை திறந்துவிட ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.யூஜிசி சிறப்பாக செயல்பட்டு வருவதால் அதனை கலைக்க வேண்டிய அவசியமில்லை.நாட்டின் 6வது பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.தனது கடுமையான உழைப்பால் இந்த சாதனையை தமிழகம் செய்துள்ளது.
ஆனால்,தமிழகத்திற்கு போதிய நிதியுதவி செய்ய மத்திய அரசு மறுத்து வருகிறது.தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் 6066.5 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக எங்கள் முதல்வர் இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளார்.எனினும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
தமிழக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மக்கள் மத்திய அரசை புறக்கணிப்பார்கள்.2019 ஆம் ஆண்டில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று மக்களே முடிவு செய்வார்கள்.மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்”. எனக் கூறினார்.