July 17, 2018
தண்டோரா குழு
கோயமுத்தூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாட்டாளர்களுடன் எழுத்தாளர்கள்,இலக்கிய அமைப்புகள்,இணையதள எழுத்தாளர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.
கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா ஜூலை 20-ஆம் தேதி துவங்கவுள்ளது.இதையொட்டி,புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்களுடன் எழுத்தாளர்கள்,இலக்கிய அமைப்புகள்,இணையதள எழுத்தாளர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி காஸ்மோபாலிடன் கிளப்பில் இன்று நடைப்பெற்றது.
இந்த சந்திப்பில் கோயம்புத்தூரைச் சேர்ந்த இலக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் எழுத்தாளர்களும்,வலைப்பதிவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.கவிஞர் கவிதாசன் வரவேற்புரை ஆற்றினார்.புத்தகத் திருவிழாவின் தலைவர் எஸ்.செளந்தரராஜன் புத்தகக் கண்காட்சிக்கான முன்னேற்பாடுகளை விவரித்தார்.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடைபெறவிருக்கும் இந்த புத்தகத் திருவிழாவில் 265 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன.தமிழ் மட்டுமல்லாது இந்திய மொழிகள்,ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளைச் சேர்ந்த பதிப்பகங்களும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்கவுள்ளன.தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்,உரைகள்,எழுத்தாளர் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொள்வதோடு,நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகளையும் தகவல்களையும் சக இலக்கிய ஆர்வலர்களோடு பகிர்ந்துகொள்ளும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.