July 17, 2018
தண்டோரா குழு
சென்னையில் சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவத்தில் கைதான 17 பேர் மீது நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தினர்.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்12 வயது மாற்றுதிறனாளி சிறுமி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அந்த சிறுமியை குடியிருப்பின் காவலாளி மற்றும் வேலையாட்கள் இணைந்து கடந்த 7 மாதங்களாக கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் குடியிருப்புக் காவலாளிகள், துப்புறவுத் தொழிலாளிகள், லிஃப்ட் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட50 பேரிடம் விசாரணைநடத்தி 24 பேரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இதில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.17 பேர் மீது போஸ்கோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 17 பேரை போலீசார் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின் சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கிருந்த வழக்கறிஞர்கள், 17 பேரையும் சுற்றிவளைத்து கடுமையாக தாக்கிஅடித்து உதைத்தனர்.
போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி 17 பேரை மீட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.