July 16, 2018
தண்டோரா குழு
மேற்குவங்க மாநிலம் மிட்னாபூரில் பிரதமர்மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்து 24 பேர் காயமடைந்தனர்.
2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் செய்து நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்.
இதன் ஒருபகுதியாக மேற்குவங்க மாநிலம் மிட்னாபூரில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பிரதமார் மோடி கலந்து கொண்டு பேசினார். அங்குகாலையில் இருந்தே மழை தூரல் இருந்ததால் பெண்கள் அமர்ந்து இருந்த பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் அந்த பந்தலில் மோடியை பார்க்கும் ஆர்வத்தில், அதிகப்படியாக தொண்டர்கள் ஏறி உள்ளனர். மோடி தனது பேச்சிற்கு இடையே, தொண்டர்கள் பந்தலின் மேல் ஏற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த போது திடீரென தற்காலிக பந்தல் சரிந்து விழுந்தது.இதில் சிக்கி பலரும் காயமடைந்தனர்.
இதையடுத்து பிரதமர் மோடி உடனடியாக தனது பேச்சை நிறுத்தினார். தனது பாதுகாப்புக்காக மேடையில் நின்று கொண்டிருந்த அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்டவர்களை கீழே சென்று மக்களை காப்பாற்றுமாறு உத்தரவிட்டார். மேலும் மக்கள் அங்குமிங்கும் ஓடி கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.பிரதமருடன் கூடவே வரும் சிறப்பு மருத்துவக்குழுவினரும், கூட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் 24 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கூட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவர் தேவையான உதவிகளை வழங்குமாறும் உத்தரவிட்டார்.