July 13, 2018
தண்டோரா குழு
கோவை இருகூர் பிரிவு அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவை இருகூர் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் குப்பம் என்ற பகுதியில் இருந்து கேரளா மாநிலத்திற்கு முருகன் டிராவல்ஸ் என்ற ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்த்து.இந்நிலையில் முன்னால் சென்று கொண்டு இருந்த லாரியை முந்த முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இந்த பேருந்தில் பயணம் செய்த இரு பெண்கள் உட்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர்,காவல் துறையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் தங்கள் குழந்தைகளை சேர்த்து விட்டு,கேரளாவிற்கு திரும்பி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த அதிகாரிகள்,கவிழ்ந்து கிடந்த பேருந்தை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தினர்.இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.