July 11, 2018 
தண்டோரா குழு
                                கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவான படம் காலா.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 7-ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து, இயக்குநர் ரஞ்சித்தை பிரபலங்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராட்டினார்கள்.இந்நிலையில்,இயக்குநர் பா.ரஞ்சித்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.அவரது அழைப்பை ஏற்று,நேற்று டெல்லியில் ராகுல் காந்தியை இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் நேரில் சந்தித்துப் பேசினர்.அப்போது எடுக்கபட்ட புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
இதுகுறித்து ராகுல் காந்தி  தனது டுவிட்டர் பக்கத்தில்,
“மெட்ராஸ்,கபாலி,காலா படங்களின் இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை டெல்லியில் சந்தித்தேன்.ரஞ்சித்துடன் அரசியல்,சினிமா மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினேன். அவரோடு பேசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.இந்த உரையாடல் தொடரும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இச்சந்திப்பு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“முக்கியமான இந்த சந்திப்பில் அரசியல் மற்றும் சினிமா குறித்து பேசினோம்.மதச்சார்பற்ற அரசியலமைப்பை கொண்டிருக்கும் நமது நாட்டில் சாதி மற்றும் மத ரீதியிலான அச்சுறுத்தல்கள் தொடர்வது குறித்து விவாதித்தோம்.இந்த விவாதம் வடிவம் பெறும் என்று நம்புகிறேன்.ஒரு தேசிய கட்சியின் தலைவர் அனைத்து கருத்தியல் கொண்டவர்களிடமும் கலந்துரையாடுவது மிகவும் ஊக்கமளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.