July 11, 2018
தண்டோரா குழு
கோவையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.நகர்,புறநகர் என பரவலாக மழை பெய்து வருகிறது.கோடை மழையால் ஏற்கனவே மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் 216 மில்லி மீட்டர் மழை பெய்யும் எனவும்,தற்போது வரை 70 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகி உள்ளதாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில்,வரும் மூன்று நாட்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.இதனால் விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் கரும்பு மற்றும் வாழைகள் சாயாத வண்ணம் முட்டுக்கொடுப்பது,உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும்,அதிக மேகமூட்டத்தால் மஞ்சள் பயிரில் நுண்ணூட்ட சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால்,இதனை தவிர்க்க போராக்ஸ்,பெராஸ் சல்பேட்,சின்க் சல்பேட்,யூடியா ஆகிய உரங்களை நீரில் கலந்து தெளிக்க வேண்டும் எனவும் வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.