July 10, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள மதுக் கடைகளைப் பிற்பகல் 2மணி வரை ஏன் மூடக் கூடாது என்பதற்குப் பதில் அளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடையை மூடக்கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறவில்லை என்றால் 7நாட்களில் மூடப்படும் என அரசு வழக்கறிஞர் உறுதியளித்தார்.
இதையடுத்து நீதிபதி கிருபாகரன், பார்களில் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றனவா என்பதை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
மேலும்,டாஸ்மாக் கடைகளை ஏன் மதியம் 2 மணிக்கு மேல் திறக்க உத்தரவிடக்கூடாது என்றும் தற்போது வரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பது அரசின் கொள்கை முடிவு என்று தெரிவித்துள்ளார். அதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளைப் பிற்பகல் 2மணி வரை ஏன் மூடக் கூடாது என்பது குறித்துப் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.