July 5, 2018
தண்டோரா குழு
புனேவில் உள்ள மேயிர் எம்.ஐ.டி. பள்ளியில் மாணவிகள் குறிப்பிட்ட நிற உள்ளாடைகளைத் தான் அணிந்து வர வேண்டும் என்று புதிய விதியை பள்ளி நிர்வாகம் கொண்டு வந்தது.இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புனே நகரில் மேயிர் எம்ஐடி என்ற பள்ளி உள்ளது.இப்பள்ளியில் நூற்றுக்கனக்கான மாணவியர் படித்து வருகின்றனர்.மாணவியரின் டைரியில் பள்ளி நிர்வாகம் சார்பில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதில்,மாணவிகள் தங்களது தோல் நிறத்திலோ அல்லது வெள்ளை நிறத்திலோ உள்ள உள்ளாடைகளைத் தான் அணிந்து வர வேண்டும்.மாணவியர் அணியும் குட்டை பாவாடை சீருடை குறிப்பிட்ட நீளத்திற்கு இருக்க வேண்டும்.பள்ளியில் உள்ள கழிப்பறையை குறிப்பிட்ட நேரத்தில் தான் பயன்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இந்த உத்தரவை ஏற்றுக் கொண்டதாக பெற்றோர் மற்றும் மாணவியர் கையெழுத்து இட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மாணவர்களும்,பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் இந்த புதிய விதிகளை அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பள்ளியின் நிர்வாக இயக்குனர் சுசித்ரா காரத் நகாரே கூறுகையில்,
“இந்த உத்தரவு நன்மைக்காகத் தான்.பெற்றோர் மற்றும் மாணவியரை துன்புறுத்தும் நோக்கம் சிறிதும் இல்லை.எங்களுக்கு ஏற்பட்ட சில அனுபவத்தினால் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”.கடந்த காலங்களில் நாங்கள் சில சோதனைகளை மேற்கொண்டோம்.அதன் அடிப்படையில் தான் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.இதில் பின்னணி திட்டம் ஏதும் இல்லை”. எனக் கூறியுள்ளார்.