July 2, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என தமிழக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு,இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டிஜிபி சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில்,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடப்பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை.ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் 150 குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது என்றும் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும்,துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 5 வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் தமிழக டிஜிபி சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.