July 2, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையத்தில் வனத்தை ஒட்டியுள்ள மலையடிவார கிராமங்களில் கடந்த மூன்று மாத காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறையிடம் ஊர் மக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீளியூர்,பனப்பாளையம்,மேடூர்,வெள்ளியங்காடு, கணுவாப்பாளையம்,முத்துக்கல்லூர்,கெம்மாரம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த மூன்று மாதகாலத்தில் மட்டும் முப்பதிற்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் கடித்து கொதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன. இவையனைத்தும் விவசாய தோட்டங்களில் உள்ள பட்டிகளில் கட்டி வைக்கபட்டிருந்த ஆடுகளாகும்.தோட்டக்காவலுக்கு உள்ள நாய்களும் இதே போல் கொல்லப்பட்டு கிடந்தன. இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள் தான் இந்த இறப்புகளுக்கு காரணம் என்றும்,உடனடியாக கால்நடைகளை கொல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராமமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக சந்தேகம் எழுந்த கெம்மாரம்பாளையம் கிராமம், தோகைமலை அடிவாரத்தில் வனத்தையொட்டியுள்ள மூர்த்தி என்பவர் தோட்டத்தில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைத்தனர்.சிறுத்தையை ஈர்க்க கூண்டுக்குள் ஒரு ஆடு கட்டி வைக்கபட்டிருந்த நிலையில்,நேற்றிரவு அந்த கூண்டுக்குள் புகுந்து ஆட்டைக்கொன்று விட்டு கூண்டின் அடிப்புற ஓட்டை வழியாக சிறுத்தை தப்பியது.
இன்று அதிகாலை இதனை பார்த்துவிட்டு விவசாயி மூர்த்தி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கூண்டுக்குள் நுழைந்து ஆட்டை கொன்று விட்டு சிறுத்தை லாவகமாக தப்பியது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.கூண்டின் அருகில் வைக்கப்பட்டிருந்த வனத்துறை கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் சிறுத்தை தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளதா என ஆய்வு நடத்தியதோடு,உடனடியாக அதே இடத்தில் இரு கதவுகள் கொண்ட புதிய வகை கூண்டை அமைத்துள்ளனர்.
பலமான இந்த புதிய கூண்டுக்குள் நுழையும் சிறுத்தை இனி தப்பிக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கும் வனத்துறையினர்,கொல்லப்பட்ட ஆட்டின் உடலை ஆய்வு நடத்திய பின்னரே வந்தது சிறுத்தையா அல்லது வேறு ஏதேனும் விலங்கா என தெரியவரும் என்றனர்.
இதனைதொடர்ந்து ஆடுகள் மற்றும் தெரு நாய்கள் மர்மமான முறையில் கொடூரமாக கொல்லப்பட்டு வருவதால் ஊருக்குள் நடமாடவே அச்சப்படுவதாகவும்,வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு தாக்குதல் நடத்தும் சிறுத்தையை பிடித்து வனத்திற்குள் விட வேண்டும் என இப்பகுதி கிராமத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.