June 29, 2018
தண்டோரா குழு
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தற்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில், தமிழ் சினிமாவில் நடிப்பின் களஞ்சியமாக போற்றப்பட்டு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஒட்டுமொத்த தமிழ்த் திரைத்துறையினர் சார்பாக தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி கூறியுள்ளது.
இது தொடர்பாக தென்னிய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,
“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞரும்,கலைமாமணி,பத்மஸ்ரீ,பத்மபூஷன்,செவாலியே, தாதாசாகேப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று கலைத்துறைக்கு பெருமையை ஈட்டு தந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் பிறந்தநாளான அக்.1 ம் தேதியை இனி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.இந்திய அளவிலும் உலகமெங்கும் வாழும் தமிழர்களாலும் கொண்டாடப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கலைச் சேவையை பாராட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் சார்பாகவும் ஒட்டுமொத்த திரையுலகினர் சார்பாகவும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது”.