June 29, 2018
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை கண்டித்து,அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
பிரெஞ்சு நாட்டினை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்டதை கண்டித்து,பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் சூயஸ் நிறுவனத்திற்கு மக்கள் கருத்தை கேட்காமல் குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும்,இது எதிர்காலத்தில் அதிக விலை கொடுத்து குடிநீரை பெற வேண்டிய நிலையினை உருவாக்குமெனவும் அக்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
மேலும்,சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டுமெனவும்,இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 100 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.